
பிள்ளைகளின்
முன்னேற்றத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் இழைத்து ஓய்ந்த நிலையில்
புறந்தள்ளப்பட்ட முதியவர்கள் வாழும் இல்லம் அது. அங்கு நடந்த விழாவிற்கு
தலைமையேற்கச் சென்றார் அதிகாரி ரங்கநாதன்.
மைக்கை பிடித்த ரங்கநாதன்
உணர்ச்சி பொங்க பேசினார். ‘‘உதிரம் கொடுத்து வளர்த்த பெற்றோரை
ஒதுக்குபவர்கள், மனிதனாக இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள். ஏணியாய்
இருந்து நம்மை ஏற்றி விட்டவர்களை எட்டி உதைப்பது எவ்வளவு கொடுமையானது
என்பதை ஒவ்வொருவரும்
உணர வேண்டும். சமுதாயத்தில் இந்த அவலநிலையை மாற்றி,
பெற்றோரை பொக்கிஷமாய் பாதுகாக்க, அனைவரும் முன்வர வேண்டும். இதற்கான பணியை,
இந்த இல்லத்திலிருந்தே துவக்க வேண்டும்.
இவ்வாறு அவர்
பேசிக்கொண்டிருந்த போது 3வது வரிசையில் முகம் தெரியாமல் நின்றிருந்த 70வயது
அலமேலு அம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமானார். மேடையில் இருந்து
ஓடிவந்த கருணை இல்ல ஊழியர்கள், முகத்தில் நீர் தெளித்து அவரை எழுப்ப
ஆயத்தமானார்கள். அப்போது அங்கு வந்த ரங்கநாதன், அலமேலு அம்மாவின் முகம்
கண்டு அதிர்ந்தார். ‘ஆம். ஐந்து வருடத்திற்கு முன்பு ரங்கநாதனால்
புறக்கணிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி, கருணை இல்லத்தில் தஞ்சமடைந்த
அவரது தாய் தான் இந்த அலமேலு அம்மாள்’.
அந்த நேரத்திலும்,
அம்மாவுக்கு என்ன ஆனது என்ற எண்ணம் ரங்கநாதனுக்கு இல்லை. அவர் மயக்கம்
தெளிந்து எழுந்தால், தான் யார் என்பதையும் இல்லத்திற்கு வந்த கதையையும்
சொல்லி விடுவார். இதனால் கைதட்டல் வாங்கிய தனது கருணை பேச்சும், மனிதநேய
சிந்தனையும் சாயம் வெளுக்கப் போகிறது என்ற பதற்றமே அவருக்குள் இருந்தது.
ஊழியர்கள் கொண்டு வந்து தெளித்த நீர், முகத்தில் படவே மெல்லக்
கண்விழித்தார் அலமேலு அம்மாள். அருகில் அமர்ந்து தனது தலையை வருடிய
ரங்கநாதனின் கரங்களை பற்றிக் கொண்ட அலமேலு அம்மா, வாயை திறக்கவில்லை. அவரது
கண்களில் இருந்து தாமரை இலையில் ஒட்டாத நீர்த்துளி போல் முத்துக்களாய்
உதிர்ந்தது கண்ணீர்.
அலமேலு அம்மாள் நினைத்திருந்தால் ஒரு நொடியில்
ரங்கநாதனின் முகத்திரையை கிழித்திருக்கலாம். அவர் செய்த கொடுமைகளால்
இல்லத்திற்கு வந்த கதையை கொட்டித் தீர்த்திருக்கலாம். ஆனால் சமுதாயத்தில்
உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் தனது மகன், அவமானப்படக் கூடாது என்பதற்காக
அவர், தள்ளாத வயதிலும் கண்ணியம் காத்திருக்கிறார்.
பிள்ளைகள் தவறாக
நினைத்தாலும், அவர்களை தவறாக நினைக்காமல் மாற்றி யோசிப்பது தானே
தாய்மனசு... இதே போல் பிள்ளைகளும் நினைத்தால் எங்கே இருக்கப் போகிறது
முதியோர் இல்லங்கள்.
Comments
Post a Comment