நாட்டு மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறிவிட்டதால் பெரும்பாலானோருக்கு
மாரடைப்பு பாதிப்பு உள்ளது. இதற்கு காரணம் தவறான உணவுப்பழக்கங்கள், ரத்த
அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவையாகும். உடலுழைப்பில்
ஈடுபடாததால் மிக சிறு வயதிலேயே மாரடைப்பு நோய் வருகிறது. உப்பு மற்றும்
கொழுப்பு குறைந்த உணவுகளும், புகை பிடிக்காமல் இருத்தலும், நல்ல
உடற்பயிற்சியும் இந்நோய் வராமல் தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை
வியாதி ஆகியவற்றுக்கு தக்க மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.
இவற்றையும் மீறி ஒருவருக்கு மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?
மார்பு
வலி, மாரடைப்புக்கு ஆளானவர்களுக்கு நடு மார்பில் வலி துவங்கி இடது
தோள்பட்டை மற்றும் கை வரை வலி இருக்கும். வியர்வை ஏற்படும். இதுவே
அறிகுறிகள். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வலி தெரியாது. மாரடைப்பு
வருவதற்கு காரணம் இதயத்திற்கு ரத்தம் சப்ளை செய்யும் ரத்த குழாய்களில்
ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதே. இதனை சரி செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று, நரம்பு வழியாக ரத்த கட்டியை கரைக்கும் மருந்தை செலுத்துவது. இதற்கு
திராம்போலைசிஸ் என்று பெயர். இது 50 சதவீத நோயாளிகளுக்கே பலனளிக்கும்.
மற்றொரு
முறை ரத்த அடைப்பை கதீட்டர்(சிறிய குழாய்) மூலமாக உறிஞ்சி எடுத்து,
அடைப்பை எடுத்த இடத்தில் ஸ்டென்ட் பொருத்துவது. இதற்கு பிரைமரி
ஆஞ்சியோபிளாஸ்ட என்று பெயர். மருந்துள்ள ஸ்டென்ட், மருந்தில்லாத ஸ்டென்ட்
ஆகிய 2 வகை ஸ்டென்ட்கள் உள்ளன. இதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்
செய்தால் 90-95 சதவீதமான நோயாளிகள் பலன் பெறுவர். வலி வந்து 3-4 மணி
நேரத்திற்குள் நோயாளி மருத்துவமனைக்கு வந்தால் தான் பலன் கிடைக்கும்.
ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டவர்களுக்கு திரும்பவும் ரத்த குழாய்கள்
அடைபடாமல் தடுக்க மருந்து சாப்பிட வேண்டும். உணவு கட்டுப்பாடு,
உடற்பயிற்சி ஆகியவற்றை மருத்துவர் அனுமதியில்லாமல் நிறுத்த கூடாது. இவ்வாறு
இருதய சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்
Comments
Post a Comment