அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான்.
ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம்
கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து
தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான்
அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக
அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி.
வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி
சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டிலிருந்த வேலைக்காரியிடம் “அவ எங்க போய் தொலைஞ்சா...?” என்று கத்தினான்.
“எனக்கு தெரியாது, சார்!... காலையில யாருக்கோ போன்
பண்ணாங்க. உடனே ‘நான் அவசரமா வெளியப் போகணும். நான் வர்றவரைக்கும்
பிள்ளைங்களைப் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லிட்டுப் போனாங்க!" என்று
அவள் சொல்ல உடனே சித்ராவின் ‘செல்’லுக்கு சங்கர் போன் செய்தான்.
சித்ரா போனை எடுத்ததும், “வீட்ல இல்லாம நீ எங்க போய் தொலைஞ்சே...!?” கடுப்புடன் கத்தினான்.
“உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு
கேள்விப்பட்டதும், உடனே பேருக்குன்னு போய் பார்த்துட்டு அம்போன்னு அந்த
கிராமத்துல வசதியில்லாத உங்க அண்ணனை நம்பி விட்டுட்டு வந்திட்டீங்க. அதான்
நான் கிளம்பி வந்து சிட்டியில நல்ல ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்திருக்கேன்.
இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட்
பண்ணிக்குங்க. ப்ளீஸ்!” என்றாள்.
இதைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியில் சங்கர் தலை குனிந்தான்
Comments
Post a Comment