மின் திருட்டு என்றால் என்ன?
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு அப்பாற்பட்டு மின்சாரத்தை தவறாகப்
பயன்படுத்தும் அனைத்து முறைகளும் மின் திருட்டாகவே கணக்கில்
கொள்ளப்படுகிறது.
எதெல்லாம் மின் திருட்டு?
டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்புப் பெட்டி, மின் கம்பம் ஆகியவற்றில்
கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது. ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீடு
அல்லது வணிகத்துக்கு மின்சாரம் தருவது, வீட்டு
பயன்பாட்டுக்கு பெற்று
வணிகப் பயன்பாடு போன்ற வேறு வகைக்கு பயன்படுத்துவது, மீட்டரை ஓடவிடாமல்
காந்தம் போன்ற பொருளை வைப்பது, மீட்டரை
குறிப்பிட்ட நாட்களுக்கு துண்டித்து மின்சாரம் பயன்படுத்துவது,
கட்டுமானத்துக்கு தற்காலிக இணைப்பு பெறாமல் ஏற்கனவே உள்ள இணைப்பில் இருந்து
மின்சாரம் பெறுவது போன்றவை மின் திருட்டாகும்.
மின் திருட்டில் எத்தனை வகைகள் உள்ளன?
மீட்டரைத் திருத்துதல், மீட்டருக்கு செல்லாமல் மின்சாரத்தை மாற்றுவது, நேரடியாக கொக்கி போடுதல், மீட்டரில் போலி முத்திரை பதித்தல்,
வேறு கட்டண வீதத்துக்கு மின்சாரத்தை பயன்படுத்துதல், மின் இணைப்புத்
துண்டிக்கப்பட்டால், மின் துறை ஊழியர்கள் அனுமதியின்றி, தானாகவே மின்
இணைப்பை வயர் மூலம் மீட்டெடுத்தல் ஆகியவை மின் திருட்டு வகைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
மின் திருட்டுக்கு தண்டனை என்ன?
மின் திருட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு காப்புத் தொகை
என்ற பெயரில், ஒரு ஆண்டுக்கு கணக்கிடப்பட்டு, இரண்டு மடங்கு பயன்பாட்டுத்
தொகை அபராதம் விதிக்கப்படும். இந்த தொகையை கட்டிய பிறகு, சமரசத் தொகை என்று
ஒரு கட்டணம் வசூலிக்கப்படும். கிரிமினல் வழக்கு தொடராமல் இருக்க, இந்த
சமரசத் தொகையை நுகர்வோர் செலுத்த வேண்டும்.
மின் இணைப்பு துண்டிக்கப்படுமா?
மின் திருட்டைக் கண்டுபிடித்தவுடன், சம்பந்தப்பட்ட மின் இணைப்பை உடனடியாகத்
துண்டித்து விடுவர். பின்னர் அபராதம் மற்றும் சமரசத் தொகைக் கட்டியவுடன்
மறு இணைப்புக் கட்டணத்துடன், மறு இணைப்பு வழங்கப்படும்.
மின் திருட்டு குறித்து யாரிடம் புகார் அளிக்கலாம்?
தமிழகம் முழுவதும் மின் வாரிய சேர்மன் கட்டுப்பாட்டில் 18 பறக்கும்
படைகளும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கொண்ட படைகளும் கூடுதலாக உள்ளன.
சென்னை 94458 57591, 044-2841 2906, மதுரை, 94430 37508, 0452-2537508,
கோவை 94430 49456, 0422-2499560, திருச்சி 9443329851, 0431- 2422166 ஆகிய
எண்களில் புகார் தரலாம். மற்ற பகுதியினர் சென்னை அலுவலகத்துக்கோ, அந்தந்த
மண்டல தலைமைப் பொறியாளருக்கோ புகார் அளிக்கலாம்.
Comments
Post a Comment